Confessions of a Murderer

#BohemianRhapsody

  • Bohemian- சமூகத்தின் கட்டமைப்புகளுக்குள் அடங்காத, சுதந்திரமான கலை வெளிப்பாடு
  • Rhapsody- உணர்ச்சிப் பிழம்புகள் தெறிக்கும் இசைக் கோர்ப்பு

Confession. இதுதான் இப்பாடலினுடைய அடிநாதம்-Theme. பாடலின் நாயகன் ஒரு டீனேஜர். அவனுடைய குழந்தைப்பருவம் வறுமையாலும் மோசமான சூழ்நிலைகளாலும் சிதைக்கப்பட தான்தோன்றித் தனமான வாழ்க்கையை வாழ்கிறான். இப்படியாக நாட்கள் சென்றுகொண்டிருக்க திடீரென ஒருநாள் ஒரு கொலையைச் செய்ய நேரிடுகிறது. அதனால் நீதியின் முன் நிறுத்தப்பட்டு மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மன உளைச்சல் கொண்ட நம் நாயகன் தன் தாயிடம் கடைசி வார்த்தைகளை உதிர்த்துவிட்டு கடைசியாக தூக்கிலிடப் படுவதற்கு முதல் நாள் கடவுளிடம் முறையிடுகிறான். 

ஆனால் கதை என்ன என்பதை பாடலை எழுதியவர் கடைசிவரை சொல்லவில்லை. அவரவர் விருப்பத்திற்கேற்ப புரிந்து கொள்ளுமாறு விட்டுவிட்டார். மேற்கூறிய கதையும் என் புரிதலுக்கேற்ப நான் எழுதியது தான். இதுதான் பாடலின் Toneஉடன் நன்றாகப் பொருந்தவும் செய்கிறது.

வாழ்க்கையில் எதோவொரு கட்டத்தில் என்ன பரிகாரம் செய்தாலும் தீர்த்துக் கொள்ள முடியாத ஒரு குற்றத்தை நாம் செய்யத் தவறுவதில்லை. சில சமயம் யாருக்கு தீங்கு இழைக்கிறோமோ அவர்களே மறந்துவிட்டாலும் நம் ஆழ் மனதிலும் தூக்கத்திலும் அதைப்பற்றிய கொடுங்கனவுகள் நம்மை வாட்டி எடுப்பதுண்டு. அதிலிருந்து மீள கடவுளின் காலடியில் சரணடையும் நம்மில் சிலர் திருந்தி தம் வாழ்க்கையை முற்றிலுமாக நன்மதிப்புகளால் நிரப்புகிறோம். பின் இனியாகிலும் குற்றங்களற்ற தூய்மையான வாழ்வை வாழ எத்தனிக்கிறோம். இரண்டு விதமான நல்லவர்கள் உள்ளனர்

1.இதுவரை குற்றங்களே புரியாதவர்
2.தான் செய்த குற்றங்களின் விளைவுகளால் ஆன்மா துளைத்தெடுக்கப் பட்டு மனம்திருந்தி வாழ்பவர்

என்னைக் கேட்டால் இரண்டாம் வகையறா தான் மீண்டும் தவறிழைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ரொம்பவும் குறைவு. ஆனால் இங்கே குற்றவாளிகளுக்கு கொடுக்கப்படும் தண்டனைகள் அவர்கள் திருந்தவேண்டும் என்ற நோக்கத்தில் கொடுக்கப் படுகின்றனவா? சிறைச்சாலைகள் என்ன மாதிரியான மாற்றங்களை அவர்களின் அகத்தினுள்ளே ஏற்படுத்துகிறது? மரண தண்டனை விதிக்கப்படுவது சரியா? என்பவற்றைப் பற்றியெல்லாம் லேசாக அசை போட்டுப் பாருங்கள். இதே கேள்விகளை நம்முள் எழுப்பும் இன்னொரு படம் Sean Penn மற்றும் Susan Sarandonஇன் நடிப்பில் Tim Robbins இயக்கத்தில் வெளியான ‘Dead Man Walking’. அதையும் ஒருதரம் பார்த்துவிடுங்கள்.

இந்தப் பாடலில் மரண தண்டனை விதிக்கப்பட்ட பின் நாயகன் ‘கடவுள் எல்லாரையும் நேசிக்கிறார் எனில் நமக்கு ஏன் இந்த நிலை நேர வேண்டும்? நான் தான் திருந்திவிட்டேனே, மீண்டும் புதிதாக வாழ்க்கையைத் தொடங்குவதற்கான வழியே இல்லையா? நான் செய்ததெல்லாம் என் சொந்த விருப்பத்திலா செய்தேன்? சூழ்நிலைகளின் பலியாடாக அல்லவா நான் மாறியுள்ளேன்? பிறகு ஏன் என் வாழ்க்கை இப்படி முடியவேண்டும்?’ என்று பொருமிவிட்டு கடவுள் நம்பிக்கையை மறுக்கிறான். எதுவுமே நிலையில்லை; இனி என்ன நடந்தாலும் கவலைப்பட போவதில்லை என்று மனதை ஆசுவாசப் படுத்திக்கொண்டு தன் மரணத்தை சாந்தமான மனநிலையோடு ஏற்கிறான்.

மிகப்பெரிய fan base கொண்ட ‘Queen’ இசைக்குழுவின் Freddy Mercury என்கிற ஒற்றை ஆளால் எழுதப்பட்டு 1975ஆம் ஆண்டு ‘A night at the opera’ என்கிற ஆல்பத்தில் வெளியான Bohemian Rhapsody இப்போது கிட்டத்தட்ட cult status கொண்டு விளங்குகிறது. இப்பாடலின் சிறப்பம்சம் என்னவென்றால் இதை ஒரு குறிப்பிட்ட வகை இசைக்குள் அடக்கிவிட முடியாது. Progressive rock, progressive pop, symphonic rock மற்றும் hard rock என்று நான்கு விதமான ஜானர்களில் பாடல் பயணிக்கிறது. என்னுடைய all time favouritesஇல் நீங்கா இடம் கொண்டது❤

Advertisements

One thought on “Confessions of a Murderer

Comments are closed.