நீருக்கடியில் சில குரல்கள்

சென்ற வருடத்தின் கோவை புத்தகத் திருவிழாவிற்கு கல்லூரி நண்பர்களுடன் போன போது நான் அறிந்து கொண்ட விஷயங்கள் இரண்டு. ஒன்று, முக்கால் சதவீத மாணவர்களுக்கு புத்தகம் படிக்கும் பழக்கம் அறவே இல்லை. இரண்டாவது, மீதி இருக்கும் சொச்சம் பேர் ஆங்கிலப் புத்தகங்கள் மட்டுமே படிக்கின்றனர். என் கூட வந்த சிலர் தமிழ்ப் புத்தகங்கள் இருக்கும் ஸ்டால்களினுள் செல்லவே இல்லை. இதிலும் குறிப்பிட்ட சிலர் தரமான ஆங்கிலப் புதினங்களைத் தான் படிக்கிறார்கள். எனவே தவறில்லை தான். எங்கு தவறாகிறது என்று பார்க்கும்போது இவர்களின் வாதம் தமிழில் தரமான இலக்கியங்கள் இல்லையென்பது. சரி, அதை இவர்களுக்கு யார் சொன்னது? இவர்களே சொல்லிக்கொள்கிறார்கள். ஏற்கனவே சாரு சொல்லி வருவது போல இது ஒருவிதமான காலனி ஆதிக்க மனோநிலை என்றே சொல்லலாம். இன்னும் சில நண்பர்கள் தமிழ் படிப்பதற்கு கஷ்டமாக (??!!) இருக்கிறது என்று கூறுகிறார்கள். இத்தனைக்கும் பள்ளிப் பாடத்திட்டத்தில் தமிழை தான் இரண்டாம் மொழியாக தேர்ந்தெடுத்து படித்து வந்தவர்கள்.
 
சரி போகட்டும் என்று விட்டுவிடவும் மனமில்லை. அதனால் நான் செய்யத் தொடங்கியிருக்கும் ஒரு விஷயம் யாருடைய பிறந்தநாளாக இருந்தாலும் தமிழ்ப் புத்தகங்களைப் பரிசாக அளிப்பது. இது கொஞ்சம் கவனமாக செய்ய வேண்டிய வேலை. எடுத்த எடுப்பில் கடினமான நடை கொண்ட புத்தகங்களைக் கொடுத்தால் கொஞ்சம் படித்துவிட்டு சோர்வடைந்து புத்தகத்தை கீழே வைத்துவிடும் வாய்ப்புள்ளது. அவர்கள் மனதில் ‘தமிழ் படிப்பது கடினம்’ என்ற எண்ணம் மேலும் வலுப்பெற்றுவிடும் என்பதால் எளிய நடை, சுவாரஸ்யம் அதே சமயம் தரத்தில் குறைந்துவிடாத புத்தகமாக தேர்ந்தெடுத்து கொடுக்க வேண்டிய கட்டாயம். இவ்வாறாக நான் யோசித்து வாங்கிய புத்தகம் தான் ‘நீருக்கடியில் சில குரல்கள்’. பிரபு காளிதாஸின் எழுத்து நடை, சுவாரஸ்யம் பற்றி அவரது முகநூல் பதிவுகளின் மூலமே தெரிந்துகொண்டேன். ஆனால் இது அவரது முதல் நாவல். முகநூல் பதிவுகள் வேறு. நாவல் வேறு. எனவே அதன் தரம்? தெரியாது. சாருவின் பரிந்துரையை மட்டுமே முழுமையாக நம்பி வாங்கிய புத்தகம் இது. தோழி சிறிது நாட்கள் கழித்து வாங்கிக் கொள்கிறேன் என்று கூறியதால் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. 

ஆரண்ய காண்டம் இரண்டு மிகப்பெரிய ரசனைப் பிரிவுகளையும் (தரமான சினிமா ரசிகர்கள், ஜனரஞ்சக சினிமா ரசிகர்கள்) திருப்திப்படுத்தும் படம் என்று தாராளமாகக் கூறலாம். சாதாரண ரசிகர்களுக்கான ஆக்ஷன் காட்சிகள், ப்ளாக் ஹ்யூமர், தெறி வசனங்கள் என்றும் தரமான சினிமா ரசிகர்களுக்கான உலகத் தரத்திலான இசை, ஒளிப்பதிவு, அட்டகாசமான திரைக்கதை, கதாபாத்திர வடிவமைப்பு என்றும் படம் களைகட்டும். உதாரணமாக இந்த படத்தில் ஒரு கதாபாத்திரம் எப்போது பார்த்தாலும் ஆன்ட்டிகளை மடக்குவதைப் பற்றி மட்டுமே பேசிக்கொண்டிருப்பான். சாதாரண ரசிகர்கள் எல்லா மொக்கைப் படங்களில் வரும் சம்பந்தமில்லாத நகைச்சுவைக் காட்சிகள் போல இதையும் நினைத்து கடந்துவிடுவர். ஆனால் படத்தை நன்றாக உற்று கவனித்துக் கொண்டு வரும் நபர்களுக்கு அந்த கதாபாத்திரத்தின் இந்த கூறுதான் கதையின் போக்கையே முற்றிலுமாக மாற்றும் ப்ளாட் பாயின்ட் என்று தெரிந்திருக்கும். எனவே இரண்டு தரப்பினரையும் என்கேஜ் செய்யும் படம் என்று ஆரண்ய காண்டத்தை சொல்லலாம்.

அதே போல் தான் ‘நீருக்கடியில் சில குரல்கள்’ நாவலும். எல்லா விதமான ரசனை உடையோரையும் வெவ்வேறு கோணத்தில் நாவலைக் காண வைத்து திருப்திப்படுத்துகின்ற நாவல். சாதாரணமாக காண்பவர்களுக்கு முக்கியமான இரண்டு கதாபாத்திரங்களின் வாழ்க்கை, அதில் வரும் திடீர் திருப்பங்கள், புறவுலகம் அவர்கள் மீது திணிக்கும் சூழ்நிலைகள், அவற்றை அவர்கள் எதிர்கொள்ளும் முறை என்று சுவாரஸ்யத்திற்கு பஞ்சமில்லாமல் செல்கிறது. அதே சமயம் கவனத்துடன் படிப்பவர்களுக்கு நாவலின் களம், அந்த களத்தை துல்லியமாக எழுத்தில் கொண்டு வந்த விதம், கதாபாத்திரங்களின் உணர்வெழுச்சிகள், சிந்தனை முறைகள், மனப் போராட்டங்கள் ஆகியன புலப்படுகின்றன. இதை ஒரு விஷுவல் நாவல் என்றே கூறுவேன். அந்த அளவுக்கு ஒரு திரைக்கதை புத்தகம் போல காட்சிகளின் ஒளியமைப்பு முதற்கொண்டு எழுதியுள்ளார். இருளும் ஒளியும் நாவலெங்கும் மாறி மாறி துள்ளி குதித்து விளையாடுகின்றன. 

சரி கடைசியாக சில விஷயங்கள். ஆனால் நாவலின் முக்கிய விஷயங்களே இவைதான். ஒவ்வொரு அத்தியாயத்தின் தொடக்கத்திலும் ‘உபநிஷதம்’ என்று சில வரிகள் கொடுக்கப் பட்டுள்ளன. அதைப் படித்தாலே நாவலின் நோக்கம் என்ன என்பது புரிந்துவிடும். உதாரணமாக:

எந்த ஒன்று அனைத்தையும் தன்வசத்தில் வைத்துள்ளதாகவும் எல்லா ஜீவன்களுக்குள்ளும் ஆத்மாவாக இருந்துகொண்டும் தன்னுடைய ஒரு ரூபத்தைப் பலவாக வெளிப்படுத்துகிறதோ, அந்த ஆத்மாவை உடலில் வெளிப்படுவதாக எந்த தீரர்கள் அறிகிறார்களோ,
அவர்களுக்கு நிலையான சுகம் கிடைக்கிறது. 
மற்றவர்களுக்கு இல்லை.

-கட உபநிஷதம்.

இந்த உபநிஷதங்களுக்கு எல்லாம் பொருள் விளக்கிக் கொண்டிருக்க முடியாது. அதையெல்லாம் ஒவ்வொருவரும் தாமாக ஆராய்ந்து வாழ்ந்து பார்த்து அனுபவித்து உணர வேண்டிய விஷயங்கள். ஆனால் இதை உங்களுக்கு உணர்த்த ஒரு வழி உள்ளது. கேள்விகள். நேற்று தோழி இஸபெல்லா தன்னுடைய கட்டுரையில் எழுதியிருந்த வாக்கியம் இது:

என்னிடம் உங்களுக்கான பதில்களை எதிர்பார்க்க வேண்டாம். உங்களுக்கான கேள்விகளை நான் தயார் செய்து தருவேன். முடிந்தால் விடைகளைத் தேடிக்கொள்ளுங்கள்

-Esabella

மனிதன் என்பவன் யார்?
இப்பூவுலகில் அவனது நோக்கம் என்ன?
அதை அடைய அவன் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? எப்படி தன்னை மெருகேற்றிக் கொள்ள வேண்டும்?
இறைமை என்றால் என்ன? (முக்கியமாக இறைவனுக்கும் இறைமைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு)
எது உண்மை? எது பொய்? எது மாயை?
நிரந்தரமானது எது?
ஆன்மா என்றால் என்ன? அதை எப்படிக் கண்டறிவது?
என்பன போன்ற கேள்விகளை மனதில் ஆழமாக குறித்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையின் ஏதேனுமொரு முக்கியமான கணத்தில் இவற்றிற்கான விடைகள் உங்கள் கண் முன் விரியலாம். இல்லை அது முக்கியத்துவம் இல்லாத ரேண்டமான ஒரு காலகட்டத்திலும் வரலாம். உங்கள் வாழ்க்கையைப் பொறுத்தது. 

இவ்வாறு முழுமையான மனிதனுக்கான கூறுகளை நாவலில் கொடுத்துவிட்டு அதே சமயத்தில் இவை பற்றிய பிரக்ஞை அறவே இல்லாத, பிறழ்வுகளைக் கொண்ட கதாபாத்திரங்களை நாவல் முழுக்க அலைய விட்டது அவருடைய பாஷையில் சொல்வதென்றால் ‘ரகளை’. அந்த உபநிஷதங்களை முழுமையாக உள்வாங்கிக் கொண்டு நாவலைப் படித்தால் மொத்த கதையையும் ஒரு இருண்ட திரையரங்கில் உட்கார்ந்து படமாக பார்த்து ரசிக்கும் உணர்வு. 

இன்னொரு இடத்தில்

அன்னத்தால் ஆனது மனம். நீரால் ஆனது பிராணன். நெருப்பால் ஆனது வாக்கு

-சாந்தோக்ய உபநிஷதம்

பசி, காமம் ஆகிய இரண்டும் தான் மனிதனை பின்னாலிருந்து நகர்த்தும் இரண்டு முக்கியமான விஷயங்கள் என்று சாரு எழுதி படித்திருக்கிறேன். (இதோடு மூன்று தடவை ‘சாரு’ என்று எழுதிவிட்டது எனக்கே கொஞ்சம் சலிப்பாகத் தான் இருக்கிறது😂. என்ன செய்வது? நான் அறிந்து வைத்திருக்கும் பல விஷயங்கள் அவர் எழுதி படித்தது தான். எனவே பொறுத்துக் கொள்ளுங்கள்.) இவ்வாறாக அந்த பசி, காமம் ஆகிய இரண்டிற்கான தேடலிலும் எளிய மனிதர்கள் அடைவன, அவர்கள் இழப்பன, உணர்வன, அவர்களை வேறு ஒன்றாக மாற்றுவன எவையெல்லாம் என்பதற்கான பதிவாக ‘நீருக்கடியில் சில குரல்கள்’ நாவலைக் கூறலாம். அந்தத் தேடலில் அவர்களின் குறுக்கே வரும் அன்பு, ஏக்கம், துரோகம், வன்முறை, எதிர்பார்ப்புகள், சந்தோஷம், துக்கம், கண்ணீர், கையறுநிலை என்னும் பல உணர்வுகள் பார்வையாளர்களாகிய நமக்கும் உணரக் கிடைக்கின்றன.

‘நீரால் ஆனது பிராணன்’. அந்த பிராணனை மனத்தின் ஆழத்தில் இருந்து இயக்கும் கூறுகள் தான் ‘நீருக்கடியில் சில குரல்கள்.

Advertisements