கலைஞன் என்பவன் யார்?

எல்லாரும் எல்லா காலத்திலும் எதையோ ஒன்றை எதிர்த்துப் போராடிக்கொண்டு தான் இருக்க வேண்டியிருக்கிறது. அப்போராட்டம் தான் தாம் வாழ்வதற்கான சான்றாகவும் சிலருக்குப் படுகிறது. பிறகெப்படி தனது இருத்தலை பிரபஞ்சத்திற்கு நிரூபிப்பது? இந்த உலகை விட்டு அகன்று செல்கையில் ‘நாம்’ என்ற ஒருவர் வாழ்ந்ததற்கான சிறு தடயமாவது இருக்க வேண்டுமே என்ற பிரயாசை தான். ஆனால் எதற்கெதிராக போராடுகிறோம் என்பதில் இருக்கிறது ஒருவரது முதிர்ச்சி.

ஒரு குறிப்பிட்ட வயதுவரை புறவுலகில் வெளிப்படையாக தெரியும் விஷயங்களோடு போராடுகிறோம். அவையனைத்தும் நம்மைச் சேர்ந்த நம்மைச் சார்ந்தவையே. தனிமனித விருப்பு வெறுப்புகளின்பால் செயல்படுவன அவை. அவை ஒரு மனிதனாகத்தான் இருக்கவேண்டும் என்று அவசியமில்லை. குடும்பம், பொருளாதாரம், நமது எதிர்பார்ப்புகள், லட்சியங்கள் என்று நீண்டுகொண்டே செல்லும். இந்த போராட்டம் ஓரளவு எளிதாகவும் இருக்கிறது. காலம் செல்லச் செல்ல ‘நான்’ என்ற சுயம் கொஞ்சம் கொஞ்சமாக அழியத் துவங்கும்.

அதன் விளைவாக நமக்கு எதிராக மட்டுமில்லாமல் ஒரு சமுதாயத்திற்கு எதிராக செயல்படும் மனிதர்கள், விழுமியங்கள் எவையெல்லாம் என்பதை அறிந்துகொண்டு போர்க்கொடியை அந்தப்பக்கம் நீட்டுவோம். சாமானியனாகப் போய்விட்டால் ஒன்றும் பண்ணமுடியாத சூழ்நிலை. அட்லீஸ்ட் பரவலாக அவற்றைப் பற்றியெல்லாம் பொதுவெளியில் மற்றவர்களிடம் பேசிக்கொண்டாவது வருவோம். இன்று ஃபேஸ்புக்கில் ஆயிரக்கணக்கானோர் அதைத்தான் செய்து கொண்டிருக்கின்றனர். சொல்ல முடியாது. அவை வெறுமனே தன்னை அறிவாளி என்று நிரூபிப்பதற்கான பதிவுகளாக கூட இருக்கலாம். ஆக இவ்வாறான அறச்சீற்றங்களில் சில ஆண்டுகள் உருண்டோடிவிடும். 
திடீரென ஒருநாள் இதுபோன்ற கவிதை ஒன்றைப் படிப்போம்.

புயல் கடந்த இரவு 22

……………….

புயல் சூழ்ந்த 
காரிருளின் இரவுக்கு 
மறு இரவே வந்து விட்டது
எங்கெங்கும்
நிலவொளியின் மஞ்சள் நதி
ஒன்றுமே நடக்காததுபோல 
ஒவ்வொருவர் முகங்களிலும் 
விளக்கேற்றுகிறது
நாளை முழு நிலவு நாளில்
எனது பைத்தியம்
இன்னும் தீவிரமடைந்துவிடும்
சாலையின் குறுக்கே விழுந்து கிடக்கும்
நூறுவருட விருட்சத்தின் மேல் அமர்ந்து
பல்லாயிரம் வருட குளிரில்
பல்லாயிரம் வருட நிலவில்
ஒரு சிகரெட்டை பற்றவைக்கிறேன்
இந்த சிகரெட்டைபோல
சீக்கிரமே தீர்ந்துவிடுகிறவன்தான் நான்
ஆனால் இன்னுமொரு நாள் 
ஒரு பெரிய புயலையும் கடந்து
இருந்துகொண்டிருக்கிறேன்
நான்தான் எஞ்சியருக்கும் ஒரே விருட்சம்
என்பதுபோல உட்கார்ந்திருக்கிறேன்
இப்பேரமைதியில்விழும் 
என் நிழல்களை பார்த்தபடி

13,12,2016
இரவு 10.08
– மனுஷ்ய புத்திரன்

உடனே சுரீரென்று உரைக்கும். விளங்காமல் போனதெல்லாம் விளங்க ஆரம்பிக்கும். இந்த உலகம் பல்லாயிரம் கோடி ஆண்டுகளாக இப்படியேதான் இருக்கிறது. இன்னும் அத்தனை கோடி ஆண்டுகளும் இப்படியே தான் இருக்கும். இந்த காலவெளியின் பிரம்மாண்டத்தின் முன்னால் காலிப்பயல்களான நாம் ஒரு ஆணியையும் கழற்றப் போவதில்லை;  கானல்நீரைப் போன்ற நிலையற்ற உருவமில்லாத அர்த்தமில்லாத வாழ்க்கை என்றான பின்னர் எல்லா போராட்டக் கொடிகளையும் படுக்கப் போட்டுவிட்டு தத்துவார்த்த உரையாடல்களில் ஈடுபடத் தொடங்குவோம்.

சிலர் புத்தனாகி எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டுப் போய்விடுவார்கள். என்னைப்போன்ற சிலர், இருக்கும் வரை ஜாலியாக எதைப்பற்றியும் கவலைப்படாமல் ஒரு டயனீஸியன் வாழ்க்கை முறையை அனுபவித்துவிட்டு போகலாம் என்று கொண்டாட ஆரம்பித்துவிடுவர். ஆனால் இவ்விரண்டும் அல்லாத இன்னொரு பகுதியினர் தான் க்ரியேட்டர்ஸ்- எழுத்தாளர்கள், ஓவியர்கள், கவிஞர்கள், சினிமா இயக்குனர்கள் என்ற சிறு பட்டியல் அது. தான் அறிந்த, உணர்ந்த அனைத்தையும் தொகுத்து மீதி இருக்கும் சாதாரண மனிதக் கூட்டத்திற்கு ஞானத்தை விட்டுவிட்டுச் செல்பவர்கள் அவர்கள். 

ஆனால் வெறும் ஒரு படத்தைப் பற்றி விமர்சனம் எழுதுவதற்கே எனக்கு நாக்குத் தள்ளிவிடுகிறது. குறைந்தபட்சம் ஒரு வாரம் மெனக்கெட வேண்டியிருக்கிறது என்கிற போது வருடக்கணக்கில் ஆத்மார்த்தமான உயர்ந்த படைப்புகளை தொடர்ந்து எழுதிவரும் சிலரைப் பார்த்தால் ஆச்சரியமாக இருக்கும். உண்மையில் ஒரு படைப்பை உருவாக்க வேண்டுமானால் எத்தகைய தவம் மேற்கொள்ள வேண்டும் என்பது வாசகனான எனக்குத் தெரியும். அதனால் அவர்களின்பால் மரியாதை தானாக வந்து மனதில் குடிகொண்டு விடுகிறது.

மனுஷ்யபுத்திரன் அவர்களின் கவிதைகளைப் பற்றி ஏற்கனவே ஒரு பதிவை ஷேர் செய்திருந்தேன். இந்தாண்டு புத்தக விழாவில் அவரது மூன்று கவிதை நூல்கள் வெளியாகின்றன. நண்பர்கள் அனைவரும் வாங்கிப் படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
புத்தகங்களை வாங்க: 
http://www.uyirmmai.com/Publications/ViewCombo.aspx?bid=10007

Advertisements