இருளில் அழுகின்ற யானை

நான் புத்தக விமர்சகனும் இல்லை, சீரிய இலக்கிய வாசகனும் இல்லை. இருந்தாலும் கவிஞர் நேச மித்ரன் அவர்கள் கேட்டுக் கொண்டதால் எனக்குத் தெரிந்தவற்றை, இந்த கவிதைகளில் இருந்து எனக்குப் புரிந்தவற்றை பற்றி எழுதியிருக்கிறேன்.

எனக்கு சாரு சொல்லி தான் மனுஷின் அறிமுகமே கிடைத்தது. அவரது வலைப்பூவில் அடிக்கடி மனுஷையும் பேப்லோ நெரூதாவையும் கம்பேர் செய்து எழுதுவார், பல மேடைகளிலும் பேசியிருக்கிறார். மனுஷ்யபுத்திரனுடைய ஃபேஸ்புக் பக்கத்தை பின்தொடரத் தொடங்கிய காலத்தில் அவரது கவிதைகளைப் படிப்பேன். ஆனால் அவற்றை முழுமையான உள்அர்த்தத்துடன் உள்வாங்குவதற்குரிய பக்குவமும் எனக்கிருக்கவில்லை, எனக்கு சுவாரஸ்யம் எனத்தோன்றும் விஷயங்களும் முற்றிலும் வேறு கோணத்தில் அமைந்திருந்தன. பின்னர் ஒருநாள் Prabhu Kalidas அவர்கள் ‘ஒன்றுக்கும் உதவாதவர்கள்’ என்ற கவிதையைக் குறித்து எழுதியிருந்தார். இலக்கிய வாசிப்பில் கால் பதித்து சிறிது காலமே ஆன எனக்கு ஒவ்வொரு முறையும் எழுத்தின் அழகியல் குறித்து யாரோ ஒருவர் விளக்கினால் தானே புரியும்?

அன்றிலிருந்து தொடங்கியது தான். மனுஷின் எல்லா கவிதைகளையும் இடைவிடாது படித்துச் சிலாகித்தேன். அவரது கவிதைகளின் எழுத்து நடை மிகவும் எளிமையானதாக இருக்கும். அதற்காக அதன் பொருளைப் பற்றி தவறாக எடைபோட்டு விடாதீர்கள். ஒவ்வொரு கவிதையின் ஆழமும் உங்களை மூழ்கடிக்கச் செய்ய வல்லது. அவை மனிதர்களின் மீதான மதிப்பீடாக, சமகால அரசியல் மீதான மதிப்பீடாக, உணர்ச்சிகளின் மீதான மதிப்பீடாக, மனித வாழ்வின் ஆதாரமான, அதேசமயம் நிலவிவரும் வாழ்வியல் சூழலில் நமது ஆதாரத் தேவையான அன்பின் மீதான மதிப்பீடாக இருக்கின்றன. என்னை உலகத்திலேயே சுவாரஸ்யமான விஷயம் என்னவென்று கேட்டால் மனிதர்களைத் தான் கை காட்டுவேன். அப்பேர்பட்ட, கண்களால் கவனித்து நாம் ஆச்சர்யப்படும் மனித நடத்தைகளின், அவர்களது உணர்ச்சிகளின் சுவாரஸ்யத்தை எழுத்துக்களின் உதவியுடன் நம் கண்முன் நிறுத்துகிறார்.

Ingmar Bergmanஇன் ‘Through a glass darkly’ படத்தில் மொத்தமே நான்கு கதாபாத்திரங்கள் தான். அதில் வரும் ஒவ்வொருவரும் மற்ற கதாபாத்திரங்களை தன்னைத் தானே பாசாங்கற்ற பிம்பமாகக் கண்டு சுயமதிப்பீடு மற்றும் அக ஆராய்ச்சி செய்து கொள்வதற்கான நிலைக்கண்ணாடியாக பயன்படுத்திக் கொள்வர். அதுபோலவே மனுஷின் கவிதைகளில் வரும் கதாபாத்திரங்களும் நம்மை நாமே முழுமையாக அறிந்து கொள்வதற்கான கருவிகளாகும். வெகு நாட்களாய் என்னவென்று தெரியாமலேயே மனதை நெருடிக்கொண்டிருக்கும் விஷயங்களாகட்டும், எளிதில் ஒரு முடிவுக்கு வர இயலாத அரசியல், சமூக நிகழ்வுகள் மற்றும் உறவுச் சிக்கல்கள் ஆகட்டும் எல்லாவற்றிற்கும் யதார்த்தமான அழகியலுடன் அல்லது மனதைப் பிழியக்கூடிய வண்ணம் சொல்வடிவம் கொடுத்து நமது நிலைப்பாட்டை தெளிவாக்குகின்றன இந்த கவிதைகள்.

‘இருளில் நகரும் யானை’ தொகுப்பில் உள்ள கவிதைகள் குறித்தும் அதன் Theme குறித்தும் சொல்ல நிறைய விஷயங்கள் இருந்தாலும் புத்தகத்தின் பின் அட்டையில் உள்ள வரிகளே உள்ளே இருக்கும் அத்தனை கவிதைகளின் அடிநாதத்தையும் அழகாக எடுத்துக் கூறிவிடுவதால் அதை இங்கே பகிர்கிறேன்:

//இழப்புகளோடும் துயரத்தோடும் நாம் ஆடும் பகடைகளில் பணயம் வைக்காததென்று எதுவுமில்லை. சாவின் வினோதங்களையும் தனிமையின் ரகசிய அறைகளையும் தேடிச்செல்லும் இக்கவிதைகள் முடிவற்ற இருள் வெளியில் மிளிரும் மிருகத்தின் கண்களைப் போல இருக்கின்றன. இந்தக் கண்கள் பார்க்கும் காட்சிகள் நம்மைச் சஞ்சலமடையச் செய்பவை. அதே சமயம் இருளிலிருந்து மீட்புக்காகப் போராடுபவை//

Advertisements