The Arithmetic of Breasts -A Poem

எங்கள் கல்லூரியின் கவியரங்கத்தில் ‘களங்கமற்ற காதல்’ என்ற தலைப்பில் நான் எழுதிய கவிதை.

இந்த கவிதைக்கு அடிப்படையாய் அமைந்த கதையையும் (The Arithmetic of breasts) சில உவமைகளையும் அளித்த ரம்யா ஞானராஜன், சாரு, மனுஷ்யபுத்திரன் மற்றும் நெகிழனுக்கு நன்றிகள்

The Arithmetic of Breasts

என்னவென்று தெரியவில்லை
சிறுவயதிலிருந்தே சிக்மன்ட் ஃப்ராய்டுடன்
உலா வந்ததாலோ என்னவோ
காதலென்ற சொல்
என் வாக்கியங்களில் புழங்குவதில்லை
நான் எழுதிய கதையாகட்டும்
கவிதையாகட்டும்
ஏன் என் வாழ்க்கையே ஆகட்டும்
மருந்தளவிற்கும் காதல் புழங்குவதில்லை
தன் தாயையே மணந்த
இடீபஸ் வாழ்ந்த உலகில் காதலேது
நானும் அவந்திகாவும்
புணரும் பொழுதுகளெல்லாம்
தேகமே தீப்பிழம்பாய் மாறி
எரிமலைக் குழம்பாய் வெடித்து ஓடும்
ராட்சஷ அலைகள்
வானுயர எழும்பி நின்று
உலகையே தன் நாவுகளுக்குள்
சுருட்டிக் கொள்ளும்
மின்னல் வானத்தைக் கிழித்து
மழை வெள்ளத்தை உண்டாக்கும்
அவை கனவுக்கும் நனவுக்கும் இடையில்
ஒரு உன்மத்த நிலை
நான் அவந்திகாவின் மார்பகங்களுக்கு அடிமை
கட்டிடத்தை தாங்கும் தூண்கள் போல
எங்கள் திருமணத்தை தாங்குவது அவைதான்
என்று அவதானித்திருந்தேன்
காமம்தான் எங்கள் உறவிற்கு அடிநாதம்
என்பது என் வாதம்
இதை அவளும் அறிந்ததாலோ என்னவோ
“என் மார்பகங்கள் இல்லையென்றால்
என்னைப் பிரிந்து செல்வாயோ?”
என்று வெகுளியாய்க் கேட்பாள்
அதில்
ஒரு குழந்தையின் பரிதவிப்பை
காணும் நான்
அவளது கண்களை காண இயலாமல்
“சே, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை”
என்று எப்போதும்போல் சொல்லி வைப்பேன்
போலியாய் ஒரு சிரிப்பு
அதன் இலவச இணைப்பாக
முதல் முறை
இக்கேள்வியை அவள் கேட்டபோது
சிவன் கழுத்தில் கட்டிய நெறிபோல
தொண்டையில் ஏதோ அடைத்தது
முடிந்தும் முடியாமல் விழுங்கிய எச்சிலில்
வீற்றிருப்பது எச்சில் மட்டுமல்ல
உண்மையும் தான்
காலங்கள் கடந்து செல்ல
இப்போதெல்லாம் அவளும் கேட்பதில்லை
எனக்கும் விழுங்குவதற்கு அவசியமில்லை
ஒருநாள் காலை
அன்றைய நாளிதழின் கவிதைப் போட்டியில்
‘களங்கமற்ற காதல்’
என்ற தலைப்பை பார்த்தவுடன்
நான் சிரித்ததைக் கேட்டவள்
“இதில் சிரிப்பதற்கு என்ன?
காமத்தை எழுதுபவனுக்கு
காதலென்றால் புரியுமா?”
என்று செல்லமாக சிணுங்கினாள்
அவளைப் பின்னாலிருந்து அணைத்தவாறே
“உனக்குமட்டும் புரியுமோ?”
என்று அவள் காதை லேசாகக் கடித்தேன்
“நான் எழுதுகிறேன் பார்
களங்கமற்ற காதலைப் பற்றி”
என்று என் பிடியிலிருந்து திமிறியவள்
கண்ணோடு கண் நோக்கினாள்
இவ்வாறு கண்கள் பேசும் தருணங்களில்
வாய்ச்சொற்கள் பயனற்று போகும்
மாயந்தான் என்னவோ!
அவள்
தின்பண்டங்களை வாங்கி வைத்தால்
அதை திருடித் தின்றுவிடும்
குழந்தை போல
என் வெட்கத்தையெல்லாம்
திருடிக் கொள்வாள்
மாலை நேரத்துக் காற்று
தீண்டப்படுவதற்கென்றே காத்திருக்கும்
மரத்தின் கிளைகளை
தீண்டிச் செல்வது போல
ஒரு தேர்ந்த இசைக் கலைஞன்
கித்தாரின் நரம்புகளை மீட்டுவது போல
நான் அவளது
கூந்தல் இழைகளை
மீட்டி விடுவேன்
அதிலிருந்து எழும் இசையுடன்
சங்கமிப்பதற்காக
இதுவரை
நான் எழுதிய கவிதையைப் படித்தவள்
“என்ன இது?
வெறும் வாக்கியங்களாக இருக்கிறது
இது எப்படி கவிதையாகும்?”
என்று சிரித்தாள்
“வாழ்வியல் பேசாது
புரியாத வார்த்தைகளால்
எதுகை மோனை வேண்டி
தமிழின் குரல்வளையை
நெறித்துக் கொல்வதுதான்
கவிதை என்கிறாயா?
பேப்லோ நெரூதா, மனுஷ்ய புத்திரனின்
கவிதைகளை படித்ததுண்டா?
தஸ்தாயேவ்ஸ்கியின் கதைகள்?
கிம்-கி-டுக், இனாரித்துவின் காவியங்கள்?
அவைகளிலெல்லாம் கவித்துவம் இல்லையெனில்
நான் எழுதுவதும் கவிதை இல்லை”
என்று நான் பேசிக்கொண்டிருக்க
நெற்றியிலிருந்து வழியும் வியர்வை
அவளது இதழ்களை அடைந்தபோது
அதைப் பருக விழைந்தேன்
முத்தமிட்ட பின்
உணர்ச்சிகளின் வர்ணஜாலம்
எதையும் காட்டாமல்
வெளிறிய முகத்துடன்
அந்த உன்மத்த நிலையை
பூட்டி எடுத்துச் சென்றேன்
கொஞ்சம் கொஞ்சமாய் அனுபவித்து
புளங்காகிதம் அடைய
“என்ன நீ மட்டுந்தான்
கேள்விகளைக் கேட்பாயா?
நான் கேட்பதற்கும் பதில் சொல்”
என்று
அவளுக்கு தெரியாத கேள்வி ஒன்று
கேட்டு வைத்தேன்
சாய்ந்த கண்களுடன் அவள்
மேலே விட்டத்தை நோக்கியபோது
இமைகளின் விளிம்பில்
காலையில் இட்ட மை
அப்பட்டமாய்த் தெரிய
மேலும் குழம்பியவளாய்
உதட்டைப் பிதுக்கினாள
அன்றிலிருந்து
அவள் உதட்டைப் பிதுக்கும்
அழகைக் காண்பதற்கென்றே
சல்லடையிட்டு தேடத் தொடங்கினேன்
அவளுக்கு பதில் தெரியாத கேள்விகளை
டீக்கடையின்
ஒற்றைச் சாளரத்தின் வழியே
வெளியே தூவும் மழையை
தனியாக
சுவற்றில் சாய்ந்து இரசித்தவாறு
பருகும் தேநீருக்கு இணையானது
அதிகாலை சூரியனின்
மஞ்சள் வெளிச்சத்தில்
ஒருக்காலிட்டு அமர்ந்து
அவள் கோலமிடும் அழகைக் காண்பது
முழுவதும் வரைந்து முடித்துவிட்டு
“அப்பாடா” என்று
வெற்றிக்களிப்புடன் சிரித்தவாறு
அவள் பெருமூச்சு விடும்போது
ஏறி இறங்கும் மார்பகங்களுக்குத் தான்
உவமை தேடினேன்
சிக்கவில்லை
அவளது அழகை வர்ணிக்குமாறு
ஆயிரம் கவிதைகள் புனைந்தாலும்
அத்தனையும் செலவாகிவிடும்
அவளது கண்களுக்கு மட்டுமே
இப்படி இருக்கையில்
சொற்களுக்காக
எங்கு, யாரிடம் சென்று யாசகம் புரிவது?
மேலும்
யாசகம் செய்தால்
கேவலம்
என்று ஊரார் சொல்வதால்
திருடத் தொடங்கினேன்
இருந்தும் போதவில்லை
எனவே இனி வர்ணிக்கலாகாது
என்று நிறுத்திவிட்டேன்
திடீரென
கவிதையின் நடுவே புகுந்து
அவள் முணுமுணுப்பதையும் எழுதினாள்
“கவிதையின் முதல் பாதியைப் போல
இரண்டாம் பாதி
அவ்வளவு ஏகாந்தமாக இல்லையே” என்று
சொற்களுக்கு நடுவில் மறைந்திருக்கிறது உண்மை
ஏகாந்தமாக எழுத
எனக்கும் ஆசைதான்
ஆனால் விரல்களும் பேனாவும்
என் பேச்சைக் கேட்காமல்
தனியொரு மனம் கொண்டு
தன்னிச்சையாக எழுதுகின்றன
அலைந்து திரிபவளின் அழகியலை
வருடங்கள் உருண்டோட
ரசனைகளால்
எங்களை பூசிக்கொண்டிருந்தோம்
நாள் தவறாது
காதல் காவியங்களை
நான் அவளுக்கு படித்துக் காட்டுவதும்
அதன் பின்னர்
நாங்கள் புரிந்த
கலகம் காதல் இசையெல்லாம்
கடவுளிடம் நிகழ்த்திய உரையாடல்கள்!
ஒருவகையில்
புணர்தலும் ஆன்மீகமும் ஒன்றுதான்
இரண்டுக்கும்
எளிதில் கிட்டாத ஒரு உச்சநிலை உண்டு
அதென்னமோ தெரியவில்லை
இலக்கியந்தான்
எங்கள் கிளர்ச்சியைத் தூண்டுவது
ஆனால் இப்போதெல்லாம்
அவளது மார்பகங்களைத் தீண்டும்போது
“வேண்டாம் வலிக்கிறது” என்பாள்
சோதனை செய்ததில் தெரிந்தது
அது புற்றுநோயென்று
மார்பகங்களை அகற்றாவிடில்
மரணம் நிச்சயம் என்றபோது
பலநாளாய் கேட்காதிருந்த
கேள்வியைக் கேட்டாள்
“என் மார்பகங்கள் இல்லையென்றால்
என்னைப் பிரிந்து செல்வாயோ?
என்னதான் அவள்
அதே பழைய வெகுளித்தனத்துடன்
கேட்டிருந்தாலும்
ஆயிரம் ஆணிகளை சுத்தியல் கொண்டு
மண்டையில் அடிப்பது போலிருந்தது
எனக்கு
என்னை மீறி வந்த கண்ணீரில்
அவள் கன்னத்தை நனைத்தவாறு
சிகிச்சைக்கு அனுப்பி வைத்தேன்
அவளைப் பிரிந்த நாட்களெல்லாம்
தஸ்தாயேவ்ஸ்கியின் கதையில்
நாஸ்தென்காவை எதிர்நோக்கிக் காத்திருக்கும்
இவான் போல
சோகத்தில் ஆழ்ந்திருந்தேன்
நிலா காயும் வெண்ணிற இரவொன்றில்
வீடு திரும்பியவளிடம்
என்னிடமிருந்து அவள்
களவாடிய பொழுதுகளுக்கும் சேர்த்து
காதல் உற்சவத்தில் மூழ்கினோம்
முடிந்தபின்
இருந்தும் இல்லாத
அவளது மார்பக மஞ்சத்தில்
நான் தலைசாய்ந்த வண்ணம்
‘களங்கமற்ற காதல்’ என்று
இருவரும் சேர்ந்தெழுதிய
இக்கவிதையை வாசித்தவாறு
உறங்கலானோம்

    Advertisements