கடந்த சில வாரங்களாக கோவையில் எங்கு, எந்த சுவாரஸ்யமான நிகழ்ச்சி நடந்தாலும் ஆஜராகிவிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறேன். இரண்டு வாரங்களுக்கு முன்பு ‘Floating weeds'(1959) என்கிற ஜப்பானிய கிளாசிக் திரைப்படத்தின் திரையிடலுக்குச் சென்றிருந்தேன். நேற்றுக்கு முந்தைய நாள் ‘ஆட்டிஸம்’ பற்றிய ஒரு கருத்தரங்கு, நேற்று ‘Mustang'(2015) என்கிற ஃப்ரெஞ்ச் பட திரையிடல். எல்லாம் தனியாகத்தான். பின்னர், இதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கு என் கல்லூரியில் இருந்து யார் வருவார்கள்? ஸ்கூல் சமயத்தில் இருந்த ஜகதீஷ், செல்லக்கிளி, அம்ரிதா போன்ற நண்பர்கள் எல்லாம் இங்கு எனக்கு வாய்க்கவில்லை. சரி வேறு யாராவது ஆண் நண்பர்களை அழைக்கலாம் என்றால் ‘இதுக்கெல்லாம் மனுஷன் போவானா? ஆர்ட் ஃப்லிம் எல்லாம் எவன் உக்காந்து பொறுமையா பாக்குறது? போட்றா சிவகார்த்திகேயன் படத்த..ரஜினிமுருகன் கன் கன்..’ என்று என்னை கலாய்த்துவிட்டு அகன்று விடுவார்கள். இந்த இடத்தில் பெண் நண்பர்களை பற்றிச் சொல்லியே ஆகவேண்டும். ஹாஹா. ஒரு நாள் இரண்டு நாள் கூட வருவார்கள். பிறகு ‘ஹே என்னால உன்கூட வெளில எல்லாம் இனிமே வரமுடியாது டா..இங்க ஒருநிமிஷம் வாயேன்..(காதருகே வந்து சன்னமான குரலில்) நம்ம ரெண்டு பேர பத்தியும் ஹாஸ்டல்ல ‘கமிட்டட்’ னு பேசிக்கறாங்க டா..வீட்டுக்கு தெரிஞ்சா என்ன ஆகுறது? அம்மா திட்டுவாங்க.. அப்பா கொன்னுடுவார்.. (ஏற்கனவே கமிட் ஆகியிருந்தால்) என் பாய்ஃபிரண்ட் திட்டுவான், பின்னாடி கொல்லைல கட்டிப்போட்டுருக்க ஆட்டுக்குட்டி கோச்சுக்கும்’ என்று எஸ்கேப் ஆகிவிடுவார்கள். சரி கழுத நாமதான் யார்கூடயாவது கமிட் ஆகித் தொலையலாமே என்றால் அதற்கும் லாயக்கில்லாத ஜீவனாகத்தான் சுற்றிக் கொண்டிருக்கிறேன். ஐந்து நிமிடம் கருத்துப்பூர்வமான அல்லது கலாப்பூர்வமான விஷயங்களை பேசினாலே ஐம்பதடி எட்டக்குதித்து ஓடிவிடுவார்கள்..லைட்டா எக்ஸ்டரீம் டச் பண்ணா ‘சீ…பொண்ணுங்க கிட்ட இப்டியா பேசுவ?’ என்கிற வசை. மணிக்கணக்குல கடலை போட்றவனெல்லாம் அப்படி என்னதான்டா பேசுவீங்க? இந்த லட்சணத்தில் ‘பெண்களுக்கு சம உரிமை வேண்டும்’ என்று ‘Mustang’ படத்தில் கூக்குரல் இடுகிறார்கள். உரிமைய குடுத்தா மட்டும் நீங்கெல்லாம் என்னத்த பெருசா கிழிச்சிட போறீங்க?

இத்தனைக்கும் நான் எக்கச்சக்கமான புத்தகங்கள், கணக்கிலடங்கா சினிமாக்கள், ஏராளமான தத்துவங்கள், (கோவையில் என்னைச் சுற்றி உள்ளவர்களோடு ஒப்பிடுகையில்) நானாக உருவாக்கும் தியரிக்கள் என்று எதையும் பதம்பார்த்து கற்றறிந்தும் எழுதியும் வருபவன். நான் அறிந்ததை எல்லாம் சுவாரஸ்யமாக எடுத்துச் சொன்னாலே ஒரு கான்வர்சேஷனில் பல மணி நேரத்தை கவர் பண்ணி விடலாம் என்று ஒரு காலத்தில் நினைத்திருந்தேன் (‘ஒரு காலத்தில்’ என்ற வார்த்தையை நோட் பண்ணுங்கள். நான் பேச ஆரம்பித்தாலே ‘மொக்க போடாதடா’ என்று ஒரே வார்த்தையில் ஆஃப் செய்துவிடுகிறார்கள்). இந்தக் கொடுமையெல்லாம் தாங்காமல் தான் நார்மலான கடலைவான்கள் போல (அவர்களைத்தானே இந்தப் பொண்ணுங்க ‘நார்மல்’ என்று சொல்கிறார்கள்?) விஷயப்புண்டையே இல்லாமல் (அய்யய்யோ கெட்டவார்த்த யூஸ் பண்ணிட்டான்டி. இத்தோட இந்த கருமத்த படிக்கறத நிறுத்திக்குவோம்) ஜல்லியடித்துப் பார்க்கலாம் என்றால் மனதிற்கு ஒம்ப மாட்டேன் என்கிறது. கொள்கைப் பிடிப்பு. பேசமாலேயே இருந்தாலும் பரவாயில்லை. கண்டதையும் பேசக்கூடாது. கொஞ்சம் கேரக்டர் மாறினாலும் சுயத்தை இழந்து ‘Ship of Theseus’ போல ‘நீ அந்தக் கப்பலே இல்லடா’ என்று உள்ளம் மாரடிக்கிறது. இப்படித்தான் யாரிடமும் பேசாமல் ஆட்டிஸம் வந்த குழந்தைய போல் போஸ்டிங்கில் உட்கார்ந்திருந்த என்னைப் பார்த்து ‘சப்ஜெக்ட் கடந்த 10 மாசமா இப்படியே தான் இருக்குது. இதுக்கு உயிர் இருக்குது ஆனா பேசத் தெரியாது. யாரையையும் கண்ணோடு கண் பார்க்காது. குனிஞ்சேதான் உட்காந்துருக்கும். சினிமானு சொன்னா மட்டும் எழுந்துக்கும்’ என்று அனாமிகா(கல்லூரியில் எனக்கிருக்கும் ஒரே நெருங்கிய தோழி) பாடம் எடுக்க ஆரம்பித்து விட்டாள். இந்த சோஷியல் ஆக்வேர்ட்னஸ் வருங்காலத்தில் பெரிய மனநோயாக ஆகிவிடுமோ என்கிற பயம்வேறு எனக்கு. அனாமிகாவிடம் பேசுவது போல வேறு எந்த பெண்ணிடமாவது பேசினால் அவ்வளவுதான் முடிந்தது. என்னை சைக்கோ என்று கூறிவிடுவார்கள். நான் சைக்கோவாம். இவர்கள் சொல்லித்தான் எனக்கே தெரிகிறது. ஆனால் பைத்தியங்கள் தான் ஒரு பைத்தியம் என்பதை ஏற்றுக்கொள்ளாது தானே. ஆனால் நான் ஒத்துக்கொள்கிறேனே. இதென்ன ‘பேரடாக்ஸ்’?

‘சரி எப்பயுமே நம்மளத் தவிர மத்த யாருமே படிக்காத வகைல இருக்கும் கட்டுரைகளத் தான கிறுக்கிட்டு இருப்ப? இதென்ன புதுசா?’ என்று கேட்கும் அன்பர்களுக்கு, முக்கியமா எங்க அப்பா கேப்பார், நான் அவர விட ஞானத்துல கொஞ்சம் முன்ன இருக்கிறதுல அவருக்கு ஒரு பூரிப்பு, ‘Floating weeds’ படத்துல வரும்  அப்பாவைப் போல (அப்பாடா. இந்த வாரம் பாத்த மூன்று விஷயங்கள- Floating weeds, Autism, Mustang-பத்தியும் நைசா யாருக்கும் தெரியாம நடுவுல நுழைச்சிட்டேன்..ஹிஹி). உங்க கேள்விக்கான பதில் உங்க கேள்விலயே இருக்கு. யாருமே இல்லாத டீக்கடைல நானும் எத்தன நாள்தான் டீ ஆத்திட்டு இருக்கிறது? அதனால் தான் என் வாழ்க்கைல நடக்கற விஷயங்கல கொஞ்சம் கற்பனை கலந்து (என்னது கற்பனையா?) எழுதலாம்னு முடிவுசெஞ்சேன். அடுத்தவருடைய அந்தரங்கத்தில் மூக்கை நுழைப்பது தான் சாமானியர்களின் பொழுதுபோக்கு என்பதால் இவற்றையெல்லாம் எழுத வேண்டி இருக்கிறது. இதில் எது கற்பனை எது நிஜம் என்பத நீங்களே முடிவு செஞ்சுக்கோங்க. சரி மீண்டும் கதைக்கு வருவோம். (இந்த கருமத்த எல்லாம் எழுதனும்னு எப்படா முடிவு பண்ண? இத கதைனு வேற நீயே சொல்லிக்கற). எனக்கு நீண்ட நாளாக சிக்கன் சூப் குடிக்கனும்னு ஆசையா இருந்துச்சு. இதை எழுதும்போது ‘Chicken soup for the soul’ என்ற வீணாய்ப் போன டீனேஜர் புத்தகம் பற்றி (வேடிக்கை என்னவென்றால் நானும் டீனேஜர் தான்) ப்ரியா சொன்னது வேறு நியாபகம் வந்து தொலைகிறது. இந்தப் ப்ரியாவும் ஒரு கேரக்டர். ஆனால் இந்த கேரக்டர் பற்றி பெரிதாக சொல்வதற்கு ஒன்றும் இல்லை. சராசரி பெண்(இப்படி வேறு எழுதித் தொலைத்து விட்டேனா?பெண்களுக்கு அவர்கள் மட்டம் தட்டப்படுவது பிடிக்காது. அதுவும் தன்னைத் தானே உயர்வாக நினைத்துக் கொண்டிருக்கும் பெண்ணுக்கு. இதனால் ப்ரியாவிடம் எனக்குள்ள குறைந்தபட்ச பேச்சுவார்த்தையும் புட்டுக்கும். சாரி ப்ரியா. நத்திங் பெர்சனல்). நேற்று ‘Mustang’ திரையிடலுக்கு போனேன் என்று சொன்னேன் அல்லவா? போகிற வழியில் தான் Food Station என்கிற அருமையான ரெஸ்டாரென்ட் உள்ளது. அங்கு தான் முதன் முதலில் குறைந்தபட்ச விலையில் ஒரு நல்ல சிக்கன் சூப்பை சென்ற முறை இந்தப்பக்கம் வந்தபோது குடித்திருந்தேன் (சென்ற முறை-அனாமிகாவிற்கு பைக் ஓட்ட சொல்லிக் குடுக்கும் போது வந்த சமயம்). இப்போது தனியாக வந்துள்ளேன். வழக்கம்போல. ஆர்டர் செய்துவிட்டு உட்கார்ந்திருந்த நேரத்தில் தான் ‘நாம ஏன் இப்படி தனியாவே சுத்திட்டு இருக்கோம். ஊர்ல இருக்கிற மொக்க பயபுள்ள எல்லாம் ஆள் வச்சுருக்கிறான். நம்மகிட்ட அப்படி என்ன இல்ல?’ என்று ஆழமாக சிந்தித்த சமயத்தில் வந்த கட்டுரை/கதை தான் இது.  

அடிக்கடி ப்ராக்கட்டுக்குள் போய்விடுவதை மன்னிக்கவும். முக்கியமான விஷயம். (ஆக்சுவலி நேத்து Food station மூடியிருந்தது. கடைசில fun mall பின்னாடி இருக்கிற பானிபூரி கடைல போய் அதத்தான் சாப்பிட்டேன். ஆனாலும் எனக்கு பானிபூரிய விட சிக்கன் சூப் தான் பிடிக்குங்கிறதால நான் சூப் குடிக்கிற மாதிரியே கதைய நவுத்திட்டு போகலாம்.) இது என்னோட கதை. நான் என்ன சொன்னாலும் நீங்க நம்பித்தான் ஆகனும். பின்நவீனத்துவம், death of the author, வாசகருக்கு அதிகாரம் னு எல்லாத்தையும் உங்க கைல குடுத்துட்டா என் கதைய கந்தரகோலம் பண்ணிடுவீங்க. இதை ஒரு கிசுகிசுவாக படிப்பவர்கள் இத்தோடு ஓடி விடலாம். என் எழுத்தை அதனுடைய உள்ளடக்கத்திற்காக படிக்கும் அன்பர்களுக்கு-மேலே எழுதப்பட்டுள்ள வெறுமையில்(nothingness) இருந்து ஒரு இருப்பை(being) உருவாக்குவது எப்படி என்ற ஆராய்ச்சிக்காக எழுதப்பட்டது என்று நினைத்துக் கொள்ளுங்கள். ‘The great beauty’ என்கிற அருமையான திரைப்படத்தை கண்டிப்பாக பாருங்கள். நான் சொல்ல வரும் விஷயம் புரியும்.

பி.கு: தலைப்புக்கும் இந்த கதைக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. Gabriel Garcia Marquez எழுதிய உலகப் புகழ் பெற்ற புத்தகத்தின் பெயர் அது. S Arun Prasathஇடம் இருந்து சுட்ட வாசகம்: ‘ஏதாவது சொல்ல வேண்டும் போல் இருக்கிறது. ஆனால் யோசித்துப் பார்த்தால் எல்லாம் ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கிறது’

-இறைவன்

Advertisements