​மரகுந்தா- ஒரு பாதசாரியின் பயணக்குறிப்பு

பயணங்கள் என்றுமே எனக்கு பிடித்தமானவை. எப்போதும் சலிப்படையச் செய்ததில்லை. வாழ்க்கையில் நாம் சேர்த்து வைக்க வேண்டியது என்றுமே நல்ல நினைவுகளைத் தான் என நம்புபவன் நான். மறக்கவியலா நினைவுகளை எப்போதும் தரக்கூடியவை பயணங்கள். அவை எனக்கு  கற்றுக்கொடுத்ததெல்லாம் ஒன்று தான். இவ்வுலகம் மிகப்பெரியது. நடந்து செல்லச் செல்ல, அதன் எல்லைகள் மனிதனின் ஆசைகளைப் போல விரிந்து கொண்டே செல்லும். ஆசைகளற்று, எவ்வித எதிர்பார்ப்புமற்ற கண்ணோட்டத்தில் அவ்வுலகத்தை காண்கையில், அவை நமக்கு பலவற்றைக் கற்றுத்தரும்.  இவ்வுலகத்தில் நாமெல்லாம் ஒன்றுமே கிடையாது. அதன் பிரம்மாண்டத்தின் முன் பணிந்து அதன் போக்கில் சலனமற்று வாழத் தோன்றும்.

சரி! விஷயத்திற்கு வருவோம். கடும் பணிச்சுமை. மன அழுத்தம் என சற்று நிலை தடுமாறிய நிலையில் இருந்த எனக்கு சற்று இடைவெளி தேவைப்பட்டது. எங்காவது செல்ல வேண்டும். தனிமையில் சற்று திளைக்க வேண்டும். புதிய இடங்களை பார்க்க வேண்டும். முடிந்தால், நல்ல பயணத்துணை கிடைத்தால் எங்காவது செல்லலாம் என யோசித்தபோதே நண்பன் சூர்யகுமாரின் திருமணம் நிச்சயிக்கப்பட்ட செய்தி வர, அவனுடன் சேர்ந்து ஒரு பயணம் செல்லலாம் என திட்டமிட, உடன் ப்ரவீன் வெங்கட்டேஷ் தனக்கு ஒரு  உறவினர் இருப்பதாகவும், அவருக்கு சொந்தமான ஒரு Homestay கர்நாடகாவில் உள்ள சக்லேஷ்பூரில் உள்ள மரகுந்தா கிராமத்தில் இருப்பதாகவும் கூறினான். சற்று offbeat ஆன இடத்தைத் தான் நானும் விரும்பினேன். கூட்டம் நிறைந்த, வணிக மயமாக்கப்பட்ட சுற்றுலாத்தலங்கள் மீது இப்போதெல்லாம் நாட்டமில்லை. தற்போதைக்கு, கோவா மட்டும் விதிவிலக்கு. ஆக நான், சூர்யா, ப்ரவீன் மற்றும் ப்ரவீன்வெங்கடேஷ் என முடிவெடுத்த நிலையில், சூர்யா, தனது உறவினர்களும் இதில் சேர விருப்பம் தெரிவிக்க சரியென முடிவெடுத்து ஏழு பேர் சகிதம் செல்ல முடிவெடுத்தோம். வெள்ளி இரவு கிளம்பி திங்கள் அதிகாலைக்குள் வீடு சேர்வதாக திட்டம்.

வெள்ளி காலை,பெங்களூரில்,சூர்யாவின் மாமா தீபக் வீட்டில் அருமையான காலை உணவருந்தி அப்படியே சூர்யாவின் தம்பி பாலாவுடன் Pokemon go விளையாடியவாறே மதியமும் செல்ல, மாலை ஆறு மணிக்கு இரு ப்ரவீன்களும் Quallis ல் வந்து சேர்ந்தனர். அப்படியே பெங்களூருக்கு வெளியே வந்து ஒரு தாபாவில் இரவுணவை முடித்து, பேசியபடியே யானி, எமினெம் மற்றும் அமித் த்ரிவேதி துணையுடன் இரவு இரண்டு மணியளவில் மரகுந்தா வந்து சேர்ந்தோம். கடும் குளிர், மனித நடமாட்டமற்ற சாலை.இருபுறமும் காடுகள். மனித வாழ்க்கை இருப்பதற்க்கான சுவடுகளற்ற பாதை. சற்றே திகிலாக இருந்தது இரவுப்பயணம். குளிர் சகித்துக்கொள்ள முடியாத நிலைக்கு அருகிலிருந்தது. தங்குமிடம் வந்ததும் அதன் உரிமையாளர் சுதர்சன் எங்களை வரவேற்றார். சம்பிரதாய சிரிப்புகளுக்கு பின், உள்ளே நுழைந்தோம். நன்றாகவே இருந்தது அறைகள், எதைப்பற்றியும் யோசனையின்றி இழுத்து போர்த்திக்கொண்டு உறங்கச்சென்றோம். எனக்கு தினசரி routineல் இருந்து விடுபட்டதே சற்று ஆசுவாசமாக இருந்தது.

 காலை ஏழு மணிக்கெல்லாம் விழித்துவிட்டேன். எனக்கு முன் இரு ப்ரவீன்களும் பேசிக் கொண்டிருந்தார்கள். அருமையான தேநீருடன் எங்களை சுதர்சன் உபசரித்தார். தேநீருக்கு பின், நாங்கள் மூவரும் ஒரு நடைப்பயணம் சென்றோம். மலைக்காற்று, இதமான குளிர்,, சாலையிருபுறமும் காப்பித்தோட்ட்டங்கள், மிளகுத் தோட்டங்கள், பாக்குத்தோட்டங்கள், பெயர் தெரியாத நீண்ட மரங்கள் என சிறு பனிமூட்டத்துடன் பாதை ரம்மியமாக இருந்தது. ஊருக்கு வெளியே வந்ததும் காட்டின் பிராம்மாண்டம் புலப்பட்டது. கணிக்க முடியாத பல வகையான ஒலிச்சப்தங்களை ஏதேதோ விலங்கோ, பறவையோ  ,பூச்சிகளோ எழுப்பிக்கொண்டிருந்தன. சூரிய வெளிச்சமே புகாமல் இருட்டாக இருந்தது காடு. சில புகைப்படங்களை எடுத்துவிட்டு அறைக்குத் திரும்பினோம்.

மரகுந்தா, கர்நாடகா  மாநிலத்தின் ஹாசன் மாவட்டத்தில் சக்லேஷ்பூர் தாலுக்காவில் அமைந்துள்ள ஒரு மலைக்கிராமம். பெங்களூரிலிருந்து சுமார்  250கி.மீ., இருக்கும். மேற்கு தொடர்ச்சி மலை இருக்குமிடத்தில் உள்ள ஒரு கிராமம். மனித குடியேற்றங்கள் மிகவும் குறைவு. சுத்தமாக நாங்கள் இருந்த இடத்திற்கு 10 கி.மீ தூரத்திற்கு ஒரு சின்ன பெட்டிக்கடை கூட இல்லை. எனக்கு இது போன்ற அமைதியான இடம் பிடித்திருந்தது. எல்லா அத்தியாவசிய தேவையான பொருட்களும் நாங்கள் தங்கியிருந்த இடத்தில் Homestay நடத்துபவர்களே வைத்திருந்தார்கள். 

நாங்கள் வந்து சேர்வதற்க்குள் எல்லாரும் எழுந்து காலை உணவிற்கு தயாராயிருந்தனர்.காலை உணவு முடித்து, பாண்டவா மலைக்கு trekking சென்றோம். உடல் பெருத்துவிட்டதால் மலையேற்றம் சற்று மூச்சிரைக்க நடக்கவேண்டியிருந்தது. மலையேறி முடித்து திரும்பி  பார்த்தால் ஒன்றுமே தெரியவில்லை. அடர்பனி. சற்று தூரமாக இருவர் நின்றால் எதிரிலிருப்பவர் தெரியாவண்ணம் இருந்தது பனி. நான் தனியே அமர்ந்து கொண்டேன். அந்த மலைக்காற்றும், பனியும் உடலுக்குள் புகுந்து பல வேதியல் மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தது. யாருமற்ற மலைவெளி மனதை சமநிலைப்படுத்தியது. மற்றவர்கள் மலைக்கு அந்தப்பக்கம் சென்று திரும்பும் வரை அந்த மலைமேட்டில் அமர்ந்து வெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கு, அந்த தனிமை என்னை என்னவெல்லாமோ செய்தது. மனதில் இருந்த அத்தனை இரைச்சல்களும் விலகி லேசானாது. அவர்கள் வந்ததும், பல புகைப்படங்கள் எடுத்து இறங்க மதியம் இரண்டு மணி ஆனது. 

உடனே புறப்பட்டு மதிய உணவை முடித்துக்கொண்டு நீர்வீழ்ச்சிக்கு சென்றோம். பெரிய உயரமான நீர்வீழ்ச்சியில்லை என்றாலும் அடித்துக்கொண்டு முழுவேகத்துடன் சென்றுகொண்டிருந்தது. இறங்கினால் கடும் குளிர்ச்சியாக இருந்தது. வழுக்கலான பாறைகள். சுற்றியும் மலைக்காடுகள். நீரின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் ஒரு பாறையின் இடுக்கில் அடைக்கலமானேன். குளித்து முடித்து ஏறினால் மணி ஆறாயிருந்தது. இருட்ட துவங்கி மழை லேசாக ஆரம்பித்தது.

இருட்டுவதற்குள் சிறிது ஷாப்பிங் செய்துவிட்டு, லேசான தூறலில் தீ மூட்டி சுற்றி அமர்ந்து குளிர்காய்ந்து கொண்டே பேசிக்கொண்டு  இருந்தோம். பின்னால் இளையராஜாவை  பாலகுமார் ஒலிக்க விட்டுக்கொண்டிருந்தான். ஒரு கட்டத்தில், குடி ஏன் இங்கு ஒரு moral issueவாகப் பார்க்கப் படுகிறது என்பதைப்பற்றி நானும் ப்ரவீனும் பேசிக்கொண்டிருக்க,, அருகில் அந்தப்பக்கம் குடும்பசகிதம் கணவன், மனைவி, தாய் என ஒரு வட இந்திய குடும்பம் மது அருந்திக்கொண்டிருந்தது. நானும் ப்ரவீனும் மனிதர்களின் மனநிலை எப்படி வித்தியாசமானதாகவும் கலாச்சார அமைப்பு வேறுபட்டும் உள்ளதென சிரித்துக்கொண்டோம்.உணவுக்கு பின் சீட்டுகட்டுகள் ஜோராக பறந்தன, விடியல் மூன்று மணி வரை ஆட்டம் தொடர்ந்தது. மனத்திருப்தியுடன் சனிக்கிழமை முடிந்தது. 

ஞாயிறு எல்லாரும் தாமதமாக எழுந்து காலை உணவை முடித்து அற்புதமான ஒரு நாளை கழிக்க இடம் அமைத்து கொடுத்த சுதர்சனிடம் விடை பெற்று சிக்மகளூருக்கு பயணமானோம். இதுவும் ஒரு மலைப்பிரதேசமானாலும் சற்று commercialised ஆக இருந்தது. முல்லையன்கிரி மலையேற்றம் என்றார்கள். மறுபடியும் மலையா?? என யோசித்தே இறங்கினால் எங்கு பார்த்தாலும் மனிதக்கூட்டம். ஊட்டியை நியாபகப்படுத்தியது. ஏற்றம் சற்று சுலபமாக இருந்தது, பல புகைப்படங்களை எடுத்து இறங்கி மதிய உணவு முடித்து, ஷாப்பிங் முடித்து கிளம்ப நேரமாகிவிட்டிருந்தது, பேலூர், ஹலேபிட் சென்று பெங்களூர் திரும்ப இருந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. நேராக பெங்களூருக்கு வண்டியை விட்டார்கள், பெங்களூர் இறங்கி ஊருக்கு புறப்படும் பேருந்து அருகே சென்ற போது மீண்டும் இயல்பு வாழ்க்கை கண்முன் வந்தது, மீண்டும் இயந்திர வாழ்க்கையை யோசித்த போதே தலை சுற்றியது. இருந்தும் இது போன்ற பயணங்கள் தான் வாழ்வில் ஒரு பிடிமானத்தை கொடுக்கிறது. அற்புதமாக ஒருங்கிணைத்த ப்ரவீனை பாராட்டியே  ஆக வேண்டும். மீண்டும் அடுத்த பயணத்தை எதிர்நோக்கியபடி வாழ்க்கை நகர்கிறது.

 

-Dazz

Advertisements