Celebration of the Simplicities of Life

பொதுவாகவே இந்தியர்கள் எளிதில் உணர்ச்சிவயப்படும் வகையறாவைச் சேர்ந்தவர்கள். அதைப்பற்றி என்னுடைய ‘தேவடியா’ என்னும் கவிதையில் விரிவாக எழுதியிருந்தேன். ஒரு குறிப்பிட்ட பகுதியினுடைய கலாச்சாரமும் அந்த மக்களுடைய குணாதிசயங்களும் அப்பகுதியில் உருவாக்கப்படும் கலைப் படைப்புகளில் பிரதிபலிக்கும் என்பது கருத்து. அப்படிப் பார்த்தோமானால் ஏன் இந்தியத் திரைப்படங்கள்  மெலோட்ரமேட்டிக்காக எடுக்கப்படுகின்றன என்ற கேள்விக்கு பதில் விளங்கும். எனவே ஒரு நாட்டினுடைய படங்களை அதன் ‘கல்ச்சுரல் மற்றும் ஹ்யுமேனிட்டாரியன் என்சைக்கிளோபீடியா’வாக எடுத்துக்கொள்ளலாம். உணர்ச்சிப் பிழம்புகள் தெறிக்க கதாநாயகன் வீராவேசமாக பேசும் வசனங்களும் (வீரபாண்டிய கட்டபொம்மன்) அழுதே சலிக்கும் பெண் கதாப்பாத்திரங்களும் (துலாபாரம்) கதைகளில் பெரும்பாலும் இடம் பெற்றன. பார்வையாளர்களும் அக்காட்சிகளால் பாதிக்கப்பட்டனர் ஏனென்றால் அவர்களால் அப்படங்களுடன் தங்கள் வாழ்க்கையை எளிதாக ரிலேட் செய்துகொள்ள முடிந்தது.

ஆனால் இத்திரைப்பட பாணி உண்மையில் யதார்த்தத்தைக் கெடுத்து காட்சிகளின் இயல்புத்தன்மையை பாதிக்கிறது. சொல்லப்போனால் இவ்வகையான ‘ஏற்றிக் கூறும்’ காட்சிகள் இலக்கியத்தில் வரும் உயர்வு நவிற்சி அணிக்கு சான்றாகும். அது கவிதைகளுக்கும், கதைகளுக்கும், மேடை நாடகங்களுக்கும் வேண்டுமானால் ஒத்துப்போகலாம். ஏனென்றால் அவ்விடங்களில் அது அட்மாஸ்பியரை குறிப்பிட்ட உணர்வுக்கு ஏற்றவாறு மாற்ற உதவும். ஆனால் திரைப்படங்களிலோ இந்த உத்தி காட்சிகளை வலிந்து நுழைத்தாற் போல் மாற்றி படம் பார்க்கும் ஃப்லோவைக் கெடுக்கிறது. மிகச்சில இடங்களிலே (மணிரத்னத்தின் பழைய படங்கள்) இது கவிதை போன்ற காட்சிகளை உருவாக்க வழிவகுக்கிறது. அதுவும் அதை ஒழுங்காக பயன்படுத்தத் தெரிந்தால் மட்டுமே. 

சரி. இப்படிப்பட்ட காட்சிகள் ஏதும் இல்லாமல் ஒரு நல்ல சுவாரஸ்யமான படத்தை எடுப்பது எப்படி என்று நீங்கள் கேட்கலாம். அதற்கான பதில் தான் ‘திதி’ என்னும் கன்னடத் திரைப்படம். இயக்குநர் ராம் ரெட்டியின் முதல் படமே பல்வேறு தரப்புகளால் பாராட்டப்பட்டு விமர்சகர்கள், இரசிகர்கள் (ஆம், நம் நாட்டில் இப்பிரிவினை உள்ளது) ஆகிய இருவராலும் கொண்டாடப்பட்டது. முழுக்க முழுக்க ‘லைவ் ரிக்கார்டிங்’ முறையில் ஒலிப்பதிவு செய்யப்பட்டு மிகவும் சாதாரணமான, ஆனால் கச்சிதமாகப் பொருந்துகின்ற ஒளிப்பதிவைக் கொண்டுள்ள படமிது. அதுமட்டுமின்றி இப்படத்தில் வரும் அனைவரும் முதல் முறை கேமரா முன் தோன்றுபவர்களே. ஆனால் அதற்கான சுவடேதும் இல்லாமல் ‘மாஸ்’ ஆக நடித்துள்ளனர்.

படத்தின் மொத்த கதையும் ஒரு சின்ன சம்பவத்தை ஒட்டி நடக்கும் விஷயங்களே. சென்ச்சுரி கௌடா என்னும் நூற்றியொரு வயது கிழவர் இறந்துவிட அதை அவரது வம்சாவளியினர் எப்படி எதிர்கொள்கின்றனர்/பயன்படுத்திக்கொள்கின்றனர் என்பது தான் இரண்டு மணி நேரப் படத்தினது கதை. இதை மூன்று கேரக்டர்களை முன்னிறுத்தி நமக்கு விளக்குகின்றனர். 

தாத்தா கட்டப்பா:(விளக்கம்-தாடிக்காரன்)

இவர் எந்த வேலைக்கும் செல்லாமல் எதன் மீதும் நாட்டமில்லாமல் (துறவி) ஊர்சுற்றிக் கொண்டும் குழந்தைகளுடன் ஆடுபுலியாட்டம் ஆடிக்கொண்டும் வாழும் ஒரு சுதந்திரப் பக்ஷி. மகனின் சம்பாத்தியத்தில் பிழைப்பு நடத்தும் சுகவாசி. மெட்டீரியலிசத்திற்கு எதிரான ஒரு வித்தியாசமான கேரக்டர். படத்தின் ஹைலைட் கேரக்டரும் இவரே.

மகன் தம்மன்னா:

இவர் தன்னுடைய தந்தைக்கு அப்படியே எதிர்துருவம். உழைத்து வாழ்ந்து வந்தவர். ஆனால் பணத்தின் (மண், பொன்) மீது அதீத ஆசை உண்டு. அதற்காக எதையும் செய்யத் துணிந்தவர். மெட்டீரியலிசத்தின் முழு உருவம்.

பேரன் அபி:

இவன் இன்னும் மீசைகூட முளைக்காத பாலகன். நண்பர்களுடன் மரம் கடத்தல், ஆற்று மண் கடத்தல் போன்ற தொழில்களை செய்துகொண்டும் காதல், காமம் (பெண்) என்று டிபிக்கல் டீனேஜர் போல் வெட்டியான வாழ்க்கையை வாழும் ஒருவன்.

இம்மூன்று பேருடைய வாழ்க்கையையும் இன்னும் சிலபல வித்தியாசமான கேரக்டர்களுடைய செயல்களையும் கொண்டு கதை பயணிக்கிறது. ஒரு கிராமத்தின் கலாச்சாரத்தை அச்சு அசலாக பதிவு செய்துள்ளனர். இவ்வளவு சாதாரணமான, தினமும் செய்தித்தாள்களில் நாம் வாசிக்கும் ஒரு துண்டு செய்தி போன்ற கதையை சுவாரஸ்யமாக மாற்றுவது கதாப்பாத்திரங்களுக்கு இடையில் இருக்கும் முரண்கள் தான் (கான்ட்ரடிக்சன்ஸ் அண்ட் கான்ஃப்ளிக்ட்ஸ்). அதை எழுதியவர்கள் என்ற வகையில் இப்படத்தின் திரைக்கதை ஆசிரியர்கள் பலத்த கரகோஷத்திற்கு உரியவர்கள். ஃப்ரான்சிஸ் ஃபோர்ட் கப்பொலா என்னும் மாபெரும் திரைப்பட மேதை ‘அன்ஃபொர்கெட்டபிள் கேரக்டர்ஸ்’ என்று பாராட்டியுள்ள திரைப்படம் இது.

கடைசியாக, 

நம்மில் பெரும்பாலானவர்கள் வாழ்க்கை போரடித்துப் போனால் புத்தகங்கள், திரைப்படங்கள், கேம்ஸ் போன்ற ‘எஸ்கேபிஸ்ட்’ வழியைத் தான் நாடுகின்றனர். அது சுற்றி உள்ளவர்களிடம் இருந்து நம்மை அன்னியப்படுத்துகிறது. நானும் அப்படித்தான். ஆனால் என்னையும் தரைக்குக் கொண்டு வந்து ‘மனிதர்கள் எவ்வளவு சுவாரஸ்யமானவர்கள்’ என்பதை மறுபரிசீலனை செய்ய வைத்த படம் இது. வாழ்க்கையின் சிம்ப்ளிசிட்டியை கொண்டாடிய விதத்தில் இப்படம் என் மனதில் நீங்காத இடம் பெறுகிறது. 

Advertisements