Book of Job:
“Where were you when I laid the foundations of the Earth?
When the morning stars sang together, and all the sons of God shouted for joy?”

image

பள்ளிப்பருவம் முடியும் வரை என் வாழ்க்கையின் முழு அதிகாரமும் என் கையில் இருந்தது. சுவாரசியமாக எதுவும் நடந்து விடவில்லை. நினைத்ததை எல்லாம் சாதித்துக் கொண்டிருந்தேன். எதற்காகவும் யாரிடமும் எந்த உதவியும் எதிர்பார்த்ததில்லை. கடவுளிடமும். Atheist என்று என்னைப்பற்றி நானே பறைசாற்றிக் கொண்டிருந்த காலகட்டம். எக்சிஸ்டன்ஷியலிச சிந்தனை ஆற்றல் ஓரளவு இருந்ததால் என்னுள் ஒரு Condescending Personality உருவாகத் தொடங்கியிருந்தது.

The Tree of Life
2012. முதல் முறை இந்தப் படத்தை பார்த்த வருடம். பதினோறாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம். பல நல்ல படங்களையும் உலக சினிமாக்களையும் பார்க்கத் தொடங்கி இருந்தோம். நண்பன் ஜகதீக்ஷ் சென்னை பர்மா பஜாரில் இப்படத்தின் DVDஐ வாங்கி வந்திருந்தான். அன்றே அவனிடமிருந்து அதை இரவல் வாங்கிக்கொண்டு வந்து பார்த்தேன். உண்மையைச் சொல்லப் போனால் முதல் முறை இப்படத்தைப் பார்க்கும்போது பாதியிலேயே தூங்கி விட்டேன். வித்தியாசமான கதைகளையும் பரபர திரைக்கதைகளையும் கொண்ட படங்களை பார்த்துக் கொண்டிருந்த சமயம். ஆதலால் கொஞ்சம் சாதாரணமான கதையும் நம் பொறுமையை சோதிக்கும் திரைக்கதையும் இப்படம் கொண்டிருந்ததால் தூக்கத்தை அடக்க முடியவில்லை. இருந்தும் இன்னொரு நாள் எப்படியாவது பார்த்தே ஆகவேண்டும் என்கிற முனைப்பில் உட்கார்ந்து வெற்றிகரமாக முழுவதுமாக பார்த்து முடித்துவிட்டேன்.

image

கதை என்று பெரிதாக சொல்வதற்கு எதுவும் இல்லை. தன் குடும்பத்தில் ஒருவர் இறந்துவிட அந்த இழப்பிலிருந்து எப்படி அந்த குடும்பத்தினர் மீண்டு வருகின்றனர் என்ற ஒற்றை வரியே இரண்டரை மணிநேர படத்தின் கதையாகும். ஆனால் படத்தின் உருவாக்கம் (Making) ‘வேற லெவல்’ என்று சொல்லப்படும் அளவில் இருந்தது. எப்போதும் ஒரு புத்தகம் தரும் அனுபவத்தை ஒரு படம் தர இயலாது என்பது உண்மை. திரைப்படம் புத்தகத்திலிருந்து மாறுபடுவது இரண்டு முக்கியமான அம்சங்களில். ஒன்று காட்சிகள்; மற்றொன்று இசை. திரைப்படத்தின் இவ்விரண்டு முக்கியமான கூறுகளைக் கொண்டு ஒரு நல்ல இலக்கியம் தரும் அலாதியான இன்பத்திற்கு இணையான அனுபவத்தை இப்படம் தருகிறது என்றால் அது மிகையாகாது.

பன்னிரண்டாம் வகுப்பு முடிந்தது. அதுவரையில் என் கட்டுப்பாட்டில் இருந்த என் வாழ்க்கை தறிகெட்டு ஓடத் துவங்கியது. ஒரு வீணாய்ப்போன காதல். Engineering தான் படிப்பேன் என்று நான் செய்திருந்த வாழ்நாள் சபதத்தை சீர்குலைத்த ஆயிரத்தெட்டு காரணங்கள். பள்ளியில் நெருங்கிப்பழகிய எந்த நண்பர்களும் இல்லாத ஒரு மோசமான கல்லூரி. இதுபோல பல விக்ஷயங்கள் சேர்ந்து என் மனதிடத்தை உடைக்க நான் ஒருவித Surrendering மனநிலைக்கு வந்து விட்டேன். ‘சுயம்பு’ என்று என்னைப்பற்றி நானே ஏற்படுத்தியிருந்த பிம்பம் கொஞ்சம் கொஞ்சமாய் அழிந்துக் கொண்டிருந்தது.

image

வெறித்தனமாக சினிமா பார்த்தேன். நூற்றுக்கணக்கில். English, tamil, hindi, malayalam, kannada, telugu, french, german, italian, spanish, iranian, russian, korean, japanese,… படங்களையும் என்ன மொழியென்றே தெரியாமல் சில படங்களையும், 1957ல் வெளியான கருப்பு வெள்ளைப் படங்களிலிருந்து நேற்று வெளியான கலர் படங்கள் வரை பார்த்து கற்பனை உலகத்திலேயே சஞ்சரித்தேன். மாற்று சினிமா ரசனை வந்திருந்தது. கொஞ்சம் பொறுமையான அழகியல் நிறைந்த படங்களை தேடித் தேடி பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது மீண்டும் இப்படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. என்னவென்று தெரியவில்லை; இதற்கு முன்பு பார்த்த போதெல்லாம் கிட்டாத பொருளும் ஒரு விதமான இனம் புரியாத நெகிழ்ச்சியும் அடைந்தேன். இப்படத்தினுடைய இசையின் தெய்வீகம் என்னை ஆட்கொண்டது. ‘புளங்காகிதம்’ என்று சொல்வார்களே, அதன் உண்மையான அர்த்தம் இப்போதுதான் புரிந்தது.

கல்லூரியின் முதல் இரண்டு ஆண்டுகளில் தான் என் வாழ்வின் சொல்லொனாத் துன்பியல் சம்பவம் அரங்கேறியது. அந்த மனவேதனையும் தனிமை தந்த வலியும் என்னை முழுதாக வேறு ஒரு மனிதனாய், இல்லை, மனிதத்திற்கும் மேலான ஒன்றாய் மாற்றியது. ஒரு Existentialist ஆகவும் Escapist ஆகவும் evolution அடைந்தேன். Atheismஇல் இருந்து Agnosticismற்கு கொள்கைகள் இடம் தாவியது. பின்நவீனத்துவத்தின் வாசத்தை நுகரத் தொடங்கிய காலகட்டம். இப்போது நான்காவது முறையாக இப்படத்தைப் பார்த்தேன். அதன் புரிதல் பின்வருமாறு:

image

கதை: 1950கள். Texas. அன்பான அம்மா (ஜெஸ்ஸிகா சஸ்டைன்), கண்டிப்பான அப்பா (ப்ராட் பிட்), மூன்று பிள்ளைகள் என்று அழகான குடும்பம். அதில் இளைய மகன் தன்னுடைய 19 வயதில் இறந்துவிட அனைவரும் சோகத்தில் ஆழ்கின்றனர். சில நாட்கள் கடந்து செல்ல ஜெஸ்ஸிகா அத்துயரில் இருந்து மீண்டு வர முயல்கிறாள். கடவுளைப் பற்றியும் அண்டவெளியின் உருவாக்கத்தைப் (Big Bang) பற்றியும் நினைத்துப் பார்க்கிறாள். அக்காட்சிகள் நம் கண்முன் விரிய ஒரு மெல்லிய இசை பின்னணியில் ஒலிக்கிறது. உருவாக்கத்தின் பிரம்மாண்டம் கூடக்கூட இசையும் வீரியம் அடைகிறது. பூமியில் உயிர்களின் தொடக்கமும் அன்பின் வெளிப்பாடும் காட்டப்படுகிறது. இவ்வனைத்தும் ஜெஸ்ஸிகாவின் சிந்தனைக்குள். உயிர் என்பது எவ்வளவு அற்புதமான விஷயம் என்பதை அவள் உணர்கிறாள். அப்போதுதான் அதை உருவாக்கியவர் எவ்வளவு அற்புதமான ஜீவி எனவும் அவருடைய குழந்தைகளாகிய நம் மீதான அவரது கரிசனமும் இவளுக்குப் புலப்படுகிறது. தன் மகனை சொர்க்கத்தில் கடவுளின் கைகளில் தான் ஒப்படைத்திருக்கிறோம்; அதனால் இனியும் வருந்தத் தேவையில்லை என்பதை உணர்கிறாள். துக்கத்திலிருந்து மீள்கிறாள்.

சில வருடங்கள் கடந்து செல்கின்றன. 20ஆம் நூற்றாண்டு. மூத்த மகன் ஜாக் (ஷான் பென்) ஒரு பெருநகரத்தில் successful architectஆக இருக்கிறான். என்னதான் வசதியாகவும் அன்பான மனைவியுடனும் வாழ்ந்தாலும் எப்போதும் ஒருவிதமான இனம்புரியாத கலக்கத்துடன் கூடிய மனம் அவனுடைய நிம்மதியைக் கெடுக்கிறது. அப்போது ஒரு நாள் திடீரென அவனது சிறுவயது நிகழ்வுகளை நினைவு கூர்கிறான். அவன் சிறு பாலகனாக இருக்கையில் ‘தூய்மையான வாழ்விற்கு இரண்டு வழிகள்’ என்று ஜெஸ்ஸிகா அவனிடம் கூறுகிறாள். ஒன்று Grace; கடவுளின் வழி. மற்றொன்று Nature; இயற்கையின் வழி. Grace என்பது கடவுளின் துணையை நாடுவது. அவருடைய கட்டளைகளை பின்பற்றி ஒழுக்கமான வாழ்க்கையை மேற்கொள்வது. Nature என்னும் இயற்கையின் வழியில் தன் மனம் சொல்வதைக் கேட்டு அதற்கேற்ப வாழ்வது. எது தவறு எது சரி என்பதை நாமாக உணர்வது. இரண்டு வழிகளும் ஒரே இலக்கை நோக்கித்தான் செல்கின்றன. அன்பின் வழி. Grace என்பதன் உருவகமாக அப்பாவும் Natureஇன் உருவகமாக அம்மாவும் திகழ்ந்ததை பலவருடங்கள் கழித்து இப்போதுதான் ஜாக் உணர்கிறான். தன்னுடைய தந்தையை ‘கண்டிப்பானவர் அன்பில்லாதவர் கல்மனதுக்காரர்’ என்று தன் தம்பி இறந்தபோது தான் திட்டியது நினைவிற்கு வர அதற்காக மனம் வருந்தி அவரை தொலைப்பேசியில் அழைத்து மன்னிப்புக் கோர்கிறான். பின்னர் மனித உணர்வுகளையும் மனித மனதின் அபத்தங்களையும் எண்ணிப்பார்த்து வியக்கிறான். என்றுமே அகப்படாத ஒரு புரிதல் தன் சிந்தனைகளாலும் தந்தையின் அன்பை உணர்ந்து கொண்டதாலும் இன்று அகப்பட தன் தாய் அடைந்த நிம்மதியான நிலையை ஜாக் அடைவதோடு படம் நிறைவடைகிறது.

image

கடவுள் என்பவர் யார்? ஏன் நாம் அவரை பின்பற்ற வேண்டும்? எந்த நிலையில் ஒரு மனிதன் தாமாக genuineஆக கடவுளின் இருப்பை acknowledge செய்கிறான்? அவர் நமக்கு எந்த வகையில் பொருள்படுகிறார்? போன்ற கேள்விகளுக்கெல்லாம் பதில்களை இப்படத்தை பார்த்தால் அறிந்து கொள்ளலாம். அதே பதில்களை சாருவின் சிறுகதை ஒன்றில் அவர் எழுதிய ‘குயில் பாடிக் கொண்டிருக்கிறது’ என்ற ஒற்றை வரியின் மூலமாகவும் அடையலாம்.

ஒரே படம் ஒரு மனிதனின் வாழ்க்கையின் ஒவ்வொறு காலக்கட்டத்திலும் வெவ்வேறு பொருள் உணர்த்தியதை அப்போதுதான் அறிந்தேன். தோழர் ராஜேஷ் ‘Death of the Author’ என்று குறிப்பிட்டிருந்தது நினைவுக்கு வருகிறது. அதாவது ஒரு எழுத்தாளனின் (படைப்பாளியின்) வேலை காற்றில் பறக்கும் எழுத்துக்களை எட்டிப்பிடித்து தொகுத்து எழுதுவதோடு நிறைவடைகிறது. அவ்வெழுத்துகளின் அர்த்தத்தைப் புரிந்துகொள்வது முழுவதும் வாசகனின் கையில் உள்ளது. ஒவ்வொருவரும் அவரவர் Perspectiveக்கு ஏற்ப புரிந்து கொள்வார்கள் என்பது கருத்து. இக்கோணத்தில் பார்த்தோமானால் காலம் செல்லச் செல்ல மனித மனம் Evolve ஆவதை உணர்ந்து கொள்ளலாம்.

image

The Tree of Life என்கிற இப்படம் 2011இல் வெளிவந்து கேன்ஸ்(Cannes) திரைப்பட விழாவில் தங்கப்பனை(Palmer d’or) விருதை வென்றது. Best picture, Best director, Best cinematography என்ற மூன்று பிரிவுகளில் ஆஸ்கர்க்கு nominate செய்யப்பட்டது. முதலில் வலுவான content இல்லை என்று mixed reviewsஐயே படம் சந்தித்தாலும் பின்னர் அதன் உண்மையான தரம் மற்றும் Universality கண்டறியப்பட்டு உலகம் முழுக்க ஏகோபித்த ஆதரவுகளைப் பெற்று காலத்தால் அழிக்க இயலாத படைப்பாக விளங்குகிறது. பல்வேறு திரைப்பட விழாக்களில் விருதுகளை அள்ளிக் குவித்தது. என்னுடைய ‘All time favourites’இல் இப்படமும் ஒன்று.

-இறைவன்

Advertisements